அன்னை மரியாள் கிறிஸ்துவின் பாடுகளைப்பற்றி பல அதிசயமான விளக்கங்களைத் தந்து தனது மகள் பிரிஜிட்டா எவ்வாறு கிறிஸ்துவிற்காக வாழ வேண்டுமென்று கூறுகிறார்.
புத்தகம் 1 - அதிகாரம் 10

நானே வானதூதர்களின் அரசி கடவுளின் தாய். உனது மார்பின்மீது அழகிய புரூச்பின்னை அணிந்துகொள்ள வேண்டுமென்று கூறியது நானே. கடவுள் இருக்கின்றார் என்பதை எனது குழந்தைப் பருவத்திலிருந்து முழுமையாக எவ்வாறு நான் தெரிந்துகொண்டேன் என்பதைப் பற்றி உனக்கு எடுத்துரைக்கப் போகிறேன். நான் எப்போதுமே எனது மீட்பைப் பற்றியும் திருச்சபையின் கடமைகளைக் கடைபிடிப்பதைப் பற்றியும் அதிக கவனமாக இருப்பேன். மேலும் கடவுள்தான் என்னைப் படைத்தவர் என்றும் எனது ஒவ்வொரு செயலுக்கும் காரணகர்த்தா அவரே என்றும் முழுமையாக தெரிந்துகொண்டதிலிருந்து அவரை ஆழமாக அன்பு செய்ய ஆரம்பித்தேன் மேலும் நான் செய்யும் ஒவ்வொரு செயலும் பேசும் வார்த்தையும் அவருடைய கோபத்திற்கு உள்ளாகாதவாறு பார்த்துக்கொண்டேன். கடவுள் தனது மக்களுக்கு சட்ட திட்டங்களைக் கொடுத்து அவர்கள் மூலமாகவே பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதைத் தெரிந்துகொண்ட நாள் முதல் அவரை மட்டுமே அன்பு செய்யவது என்கின்ற தீர்மானத்தை எனது ஆன்மாவில் எடுத்துக்கொண்டேன். இவ்வுலக ஆசைகள் அனைத்தையும் குப்பையாக நினைத்தேன்.

இவ்வுலகை மீட்பதற்காக கன்னியின் வயிற்றிலிருந்து கடவுள் மனிதனாகப் பிறப்பார் என்று தெரிந்துகொண்டவுடன் அவர்மீது எனக்கிருந்த அன்பு பற்றி எரிந்தது அதாவது கடவுளைத் தவிர வேறு எவரையும் நினைக்கவோ விரும்பவோ என் மனம் இடம் கொடுக்கவில்லை. என்னால் முடிந்தவரை எனது பெற்றோர் மற்றும் நண்பர்களோடு பேசுவதிலிருந்தும் அவர்கள் மத்தியில் இருப்பதிலிருந்தும் விலகி என்னைத் தனிமைப் படுத்திக்கொண்டேன் என்னிடம் இருந்த அனைத்தையும் தேவைப்பட்டவர்களுக்கு கொடுத்தேன். மிக அவசியமான உடைகளையும் குறைந்த உணவையுமே வைத்துக்கொண்டேன். கடவுள் ஒருவரே என்னை மகிழ்விப்பவராக இருந்தார். கடவுள் மனிதானாகப் பிறக்கும் காலம் வரை நான் வாழ வேண்டுமென்று மிகுந்த ஆவல் கொண்டேன். ஆனால் தகுதியற்ற நானே அவருக்கு அன்னையாகும் பாக்கியம் பெற்றேன்.

நான் எனது கன்னிமையைக் காப்பாற்ற வேண்டுமென்று உறுதிகொண்டேன் அதுவே கடவுளின் விருப்பமானால் அதற்காக இவ்வுலகத்தில் எதைவேண்டுமானாலும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தேன். ஆனால் அவரது விருப்பம் எதுவாக இருந்தாலும் எனது விருப்பத்திற்காக இல்லாமல் அவரது விருப்பப்படியே நடக்க விரும்பினேன். ஏனென்றால் அவரால் எதையும் செய்ய முடியுமென்றும் எனக்கு எது மிகவும் நன்மை வாய்ந்ததோ அதையே அவர் கொடுப்பார் என்றும் முழுமையாக நம்பினேன். எனவே எனது விருப்பங்களை முழுமையாக அவரிடம் ஒப்படைத்தேன்.

கன்னிப் பெண்களை கடவுளுக்கு அரப்பணிக்கும் காலம் வந்தபோது எனது பெற்றோரும் என்னை கோவிலுக்குக் அழைத்துச் சென்றனர். அவர்களோடு இணைந்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களது கடமையை நிறைவேற்றுவதற்காக இந்தச் சடங்கு நடந்தது. நான் கடவுளை மட்டுமே விரும்புகிறேன் அவரை மிகவும் ஆசிக்கின்றேன் என்பது கடவுளுக்கு நிச்சயமாகத் தெரியும் என்பதால் எனது கன்னிமையை அவர் காக்க வேண்டும் என்று ஆசித்தேன்.

ஆனால் அவரால் முடியாதது எதுவுமில்லை என்பதால் எனது விருப்பம் அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் அவரது சித்தப்படியே ஆகட்டும் என்று எண்ணினேன். கோவிலில் கூறிய அனைத்து கட்டளைகளையும் நன்கு கேட்டறிந்தபின் வீட்டிற்குத் திரும்பி வந்தேன். அன்றுமுதல் கடவுள் மீது எனக்கிருந்த அன்பு இன்னும் அதிகமாகப் பற்றி எரிந்தது. தினமும் அது மேலும் அதிகமாக பற்றி எரியவேண்டுமென்று என் மனம் மிகுந்த ஆவல் கொண்டது.

எனவே இன்னும் அதிகமாக என்னைத் தனிமைப் படுத்திக்கோண்டேன் நான் பேசுவதிலும் கேட்பதிலும் செய்வதிலும் தீயவை இருந்துவிடலாம் என பயந்து இரவும் பகலும் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி தனிமையாகவே இருக்க விரும்பினேன். எனது அமைதியிலும் கூட நான் தீயனவற்றை நினைத்துவிடுவேனோ அதைப்பற்றி பேசிவிடுவோனோ என்று பயந்துகொண்டிருந்தேன்.

நான் கடவுள் மீது முழு நம்பிக்கையோடு என்னையும் எனது ஆன்மாவையும் கட்டுப்படுத்தவேண்டுமென்று நினைத்து அங்கலாயித்துக் கொண்டிருந்தேன். அவ்வேளையில் கடவுளின் வல்லமையும் அவர் வானதூதர்களைப் படைத்ததும் வானதூதர்கள் அவருக்கு முடிவில்லா ஆராதணை செலுத்துவதும் என் நினைவில் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வாறு நான் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மூன்று அதிசயங்களைப் பார்த்தேன். அதில் ஒன்று நட்சத்திரம் அது வானத்திலிருந்து ஔ வீசும் நட்சத்திரத்தைவிட வித்தியாசமாக இருந்தது.

இரண்டாவதாக ஒளி இதுபோன்ற ஒளியை இவ்வுலகில் கண்டதே இல்லை. மூன்றாவதாக நறுமணம் இப்படியொரு நறுமணத்தை இவ்வுலகில் சுவாசிக்கவே முடியாது அந்த அளவிற்கு அது மிகவும் அற்புதமாக இருந்தது. இந்த அனுபவத்தில் மூழ்கியிருந்த நான் குதித்து ஆடிப்பாட வேண்டும்போல் இருந்தது. அப்போது நான் ஒரு குரலைக் கேட்டேன் ஆனால் அது மனிதன் வாயிலிருந்து வரவில்லை. இதைக் கேட்டவுடன் இது மாயமாக இருக்குமோ என்று நான் மிகவும் பயந்தேன். அப்போது கடவுளின் தூதர் எனக்கு முன் தோன்றினார் மனித உருவிலிருந்த அவருக்கு உடலில்லை.

அவர் என்னிடம் அருள் நிறைந்தவளே வாழ்க! என்றுரைத்தார். இதைக் கேட்டவுடன் இந்த வாழ்த்து எத்தகையதோ இதற்கு என்ன பொருள் இந்த வாழ்த்திற்கும் வேறு எந்தவித நன்மைக்கும் நான் தகுதியில்லாதவள் ஆயிற்றே என்று நினைத்தேன் அதேவேளையில் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதையும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு அந்த வானதூதர் உமக்குப் பிறக்கப்போகும் குழந்தை தூயது அது கடவுளின் மகன் எனப்படும். இவை கடவுளின் சித்தப்படி நடக்கும் என்றார். இதைக் கேட்டவுடன் இதற்கு நான் தகுதியானவள் என்று நினைக்கவில்லை. அந்த வானதூதரிடமும் எப்படி எப்போது நிகழும் என்று கேட்கவும் துணியவில்லை. எனவே இது எவ்வாறு நிகழும் நான் கணவனை அறியேனே கடவுளுடைய தாயாவதற்கு நான் தகுதியற்றவள் என்று அந்த வானதூதரிடம் கூறினேன். அதற்கு அந்த வானதூதர் கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை எனவே இது அவரது சித்தம் என்று பதிலளித்தார்.

இவ் வார்த்தைகளைக் கேட்டவுடன் நான் கடவுளின் தாயாவதற்கு அளவுகடந்த ஆசை கொண்டேன் எனது மனம் பேருவகையால் துள்ளியது கடவுள் மீது கொண்டிருந்த அன்பின் பொருட்டு எனது உள்ளம் அக்களித்தது. எனவே இதோ ஆண்டவரின் அடிமை அவரது வாரத்தையின்படியே எனக்கு ஆகட்டும் என்று எனது வாய் பேசியது. நான் அவ்வாறு பதில் கூறிய ஒரு நொடிப்பொழுதில் எனது மகன் எனது உதிரத்தில் கருவானார். இந்த அனுபவம் விவரிக்க இயலாதது எனது உள்ளமும் எனது உடலிலுள்ள ஒவ்வொரு அங்கமும் அக்களிப்படைந்தது. அவரை எனது கருவில் தாங்கியபோது எந்ததொரு வலியையும் வேதனையையும் பாரத்தையும் நான் உணரவில்லை. நான் தாங்கியிருப்பது அனைத்து வல்லமையும் பொருந்தியவர என்பதால் என்னை நானே மிகவும் தாழ்த்திக் கொண்டேன்.

அவர் எவ்வாறு என் உதிரத்தில் கருவுற்றாரோ அதேபோலவே அவர் பிறக்கும்போதும் பாவமும் வலியும் ஏதுமின்றி எனது வயிற்றினின்று வெளிவந்தார். காற்றில் பறப்பதுபோல எனது உள்ளம் அக்களித்தது. பேரானந்தம் என்னை ஆட்கொண்டது. அவர் எனது உடலில் வந்தபோது என் அங்கமெல்லாம் எப்படி அக்களித்ததோ அதே போன்ற அனுபவம்தான் அவர் என் உடலிலிருந்து வெளியில் சென்றபோதும் இருந்தது. இதனால் எனது கன்னிமைக்கு எந்த ஒரு கலங்கமும் ஏற்படவில்லை.

இவரைப் பெற்றெடுக்கும் தகுதி எனக்கில்லை என்பதை உணர்ந்தபோதிலும் அவரது அழகை நான் கண்டபோது என் ஆன்மாவில் தேன் வந்து பாய்வதைப்போன்ற ஆனந்தமடைந்தேன். அழகான இவரது கைகளும் கால்களும் சிலுவை மீது ஆணிகளால் அறையப்படும் என்று இறைவாக்கினரகள் கூறியதை நான் நினைத்தபோது என் கண்கள் கண்ணீர் வெள்ளமாயின அந்த துக்கமானது எனது இதயத்தில் முள்ளாய்க் குத்தியது. என் மகன் கண்ணீர் நிறைந்த என் கண்களைப் பார்த்து மிகவும் துயரமடைந்தார். அவரது தெய்வீக ஆற்றலைக் கண்டுணர்ந்தபோது நான் ஆறதலடைந்தேன். இதுவே அவர் விரும்பிய வழி என்றும் இதுவே சரியான வழி என்றும் புரிந்துகொண்டு எனது எல்லாவித விருப்பங்களையும் அவரது சித்தத்திற்காகவே ஒப்புக்கொடுக்க உறுதி கொண்டேன். எனவே என் ஆனந்தமானது எப்போதும் துயரங்கள் கலந்ததாகவே இருந்தது.

எனது மகன் பாடுபடும் நேரம் வந்தபோது அவரது பகைவர்கள் அவரைக் கைதுசெய்தனர். அவர்கள் அவரது கன்னத்திலும் கழுத்திலும் அறைந்தார்கள் அவரது முகத்தில் துப்பி எள்ளி நகையாடினார்கள். கற்றூனில் கட்டி அடிக்கப்படும் இடத்திற்கு வந்தவுடன் அவர் தமது உடைகளைக் தாமாகவே களைந்து விட்டு தமது கைகளை அந்தத் தூணின் மீது வைத்தார். அதன்பிறகு அவரது பகைவரகள் இரக்கமின்றி அவரது கைகளை அங்கிருந்த தூணில் இறுகக்கட்டிப் போட்டனர். அவர் எந்த ஒரு ஆடையுமில்லாமல் நிரவாணமாக்கப்பட்டார். பிறந்தமேனியாக நின்ற அவர் அனைத்து அவமானங்களையும் தாங்கிக்கொண்டார். அவரது நண்பர்கள் அவரை விட்டு ஓடிவிட்டனர் ஆனால் அவரது பகைவர்களோ அவருக்கு எதிராக செயல்பட ஆயத்தமாகினர்.

அவர்கள் அவரைச் சுற்றி நின்றுகொண்டு எந்தப் பாவமும் பாவக் கறையுமில்லாத தூய உடலை கிழித்துப் போட்டனர். நானும் அங்கு நின்றுகொண்டிருந்தேன் அவர் மீது விழுந்த முதல் சாட்டை அடியில் மயங்கி விழுந்து இறந்தவளைப் போலானேன். நான் மீண்டும் எழுந்தபோது அவரது உடல் முழுவதும் சாட்டையால் அடிக்கப்பட்டு கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அவரகள் அந்த சாட்டையை அவரது உடலிலிருந்து உருவியபோது அவரது சதை கிழிக்கப்பட்டது மிகவும் கொடூரமாக இருந்தது. அவரது உடல் முழவதும் ஒரு இடம் விடாமல் சாட்டையால் அடித்து கிழிக்கப்பட்டிருப்பதைக்கண்டு அங்குவந்த ஒரு மனிதன் இவனை மரண தண்டனைக்கு உட்படுத்தாமல் இப்போதே கொன்றுவிடப் போகிறீர்களா? என்று கூறி அவர்கள் அடிப்பதை தடுத்து நிறுத்தினான். பிறகு என் மகன் தாமாகவே தமது உடைகளை எடுத்து உடுத்திக்கொண்டார். அவர் நின்றுகொண்டிருந்த இடம் முற்றிலும் இரத்தமயமாக இருந்தது இரத்தம் வழிந்த பாதங்கள் அவர் நடந்து சென்ற பாதையை மிகவும் தெளிவாகக் காட்டின அந்த தரை முழுவதும் இரத்தமயமாக இருந்தது.

அவர் நடந்த இடமெல்லாம் இரத்தம் வழிந்தோடிக் கிடந்ததால் அவர் நடந்த பாதையை நான் தெளிவாகக் காண முடிந்தது. ஆனால் அவர்கள் அந்த உடையைக் கூட போடவிடாமல் அவரை தள்ளிக்கொண்டும் இழுத்துக்கொண்டு சென்றனர். என் மகன் ஒரு திருடனைப்போல இழுத்துச் செல்லப்பட்டார். அவரது கண்களில் வழிந்த இரத்தம் காய்ந்துபோயிருந்தது. அவருக்கு தண்டனை அளிக்கப்பட்ட பிறகு அவரை சிலுவையைச் சுமக்கச் செய்தார்கள். அவர் சிறிது தூரம் அதைத் தூக்கிச் சென்றார் பிறகு யாரோ ஒருவர் வந்து அவருக்குப் பதிலாக அந்தச் சிலுவையைச் சுமந்துசென்றார். என் மகன் சிலுவையில் அறையப்படும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது சிலர் அவரது கழுத்தில் அடித்தனர் சிலர் அவரது முகத்தில் குத்தினர். ஒருவன் எவ்வளவு கொடுமையாக குத்தினான் என்றால் நான் அதைப் பார்க்காவிட்டாலும் அந்தச் சந்தத்தைத் தெளிவாக கேட்க முடிந்தது. சிலுவையில் அறையப்படும் இடத்திற்கு வந்தபோது அவரைச் சிலுவையில் அறைவதற்குத் தேவையான அனைத்து சாதனங்களும் ஆயத்தமாக இருந்தன.

என் மகன் அந்த இடத்திற்கு வந்தவுடன் தாமாகவே தமது ஆடைகளைக் களைந்தார். படைவீரர்கள் அவற்றை எடுத்துக்கொண்டு இனி இது இவனது ஆடைகள் கிடையாது நமக்குரியவை ஏனென்றால் இவன் மரண தண்டனைக்கு உள்ளானவன் என்று கூறினர். எனது மகன் பிறந்தமேனியாக நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர் ஓடிவந்து தனது முக்காடினைக் கொடுத்தார் அதை அவர் மகிழ்ச்சியாகப் பெற்றுக்கொண்டு தமது அவமானத்தை அதனால் மூடிக்கொண்டார். அதன் பிறகு அவரது பகைவர்கள் அவரை சிலுவையின் மீது இழுத்துப்போட்டு ஏற்கனவே ஆணி அடிப்பதற்காக இருந்த துவாரத்தின் மீது அவரது வலது கரத்தைவைத்து ஆணிகளால் அறைந்தனர்.

அவரது கைகள் விறைப்பாக இருந்ததால் அவரது கரத்தில் கயிற்றைக் கட்டி மறுபுறமாக இழுத்து அங்கிருந்த துவாரத்தின் மீது வைத்து ஆணி அறைந்தார்கள். பிறகு அவரது அங்கங்களும் நரம்புகளும் வெடித்துவிடும் அளவிற்கு அவரது வலது பாதத்தை இடது பாதத்தின் மீது வைத்து இரண்டு ஆணிகளால் அறைந்தார்கள். அதன் பிறகு முள் முடியை[1] அவரது தலையில் வைத்து அடித்தார்கள். அதனால் வணக்கத்திற்குரிய அவரது தலை வெட்டுண்டு அதிலிருந்து வெளிவந்த இரத்தமானது அவரது கண்களையும் காதுகளையும் மறைத்து அவரது தாடி வழியாக ஒழுகியது.

இவ்வாறு அவர் சிலுவையில் காயப்பட்டு இரத்த வெள்ளத்தில் தொங்கிக் கொண்டிருந்தபோது கண்ணீரோடு நின்று கொண்டிருந்த என் மேல் மனமிரங்கி இரத்தம் சூழ்ந்த கண்களோடு சிலுவையின் அருகில் நின்றுகொண்டிருந்த எனது உறவினரான அருளப்பரைப் பார்த்து அவரிடம் என்னை ஒப்படைத்தார். அப்போது சிலர் எனது மகனை ஒரு திருடன் என்று கூறுவதையும் சிலர் இவன் பொய்யன் என்று கூறுவதையும் சிலர் இப்படிப்பட்ட சாவிற்கு இவனைத்தவிர வேறு எவனுக்கும் தகுதியில்லை என்று பழி கூறுவதையும் நான் கேட்டேன். இவற்றைக் கேட்டதும் எனது துக்கம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் நான் கூறியதுபோல முதல் ஆணி அவரது கரங்களில் அடித்தது எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது நான் இறந்ததுபோலானேன் எனது கண்கள் இருண்டுபோயின எனது கரங்கள் நடுங்கின என்னால் சரியாக நிற்கக்கூட முடியவில்லை. எனவே துக்கம் தாங்கமுடியாமல் போனதால் அவரை ஆணியால் அடித்து சிலுவையில் தொங்கவிடும் வரை என்ன நடந்தது என்பதை நான் கவனிக்க முடியாமல் போயிற்று. நான் எழுந்தபோது எனது மகன் மிகுந்த வேதனையோடு சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

துக்கம் நிறைந்த அவரது தாயாகிய என்னால் நிற்கக் கூட இயலவில்லை. அழுதுகொண்டு ஆறுதலின்றி அங்கு நின்றுகொண்டிருந்த என்னையும் அவரது நண்பர்களையும் அவர் பார்த்ததும் மிகவும் வருந்தி பரிதாபமான குரலில் தமது தந்தையை நோக்கி தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று கதறினார். தந்தையே உம்மைத் தவிர தன்மீது கருணை காட்டுவோர் எவரும் இல்லை என்று கதறுவதுபோல் இருந்தது. அவ்வேளையில் அவரது கண்கள் அவர் பாதி இறந்துவிட்ட நிலையைக் குறித்தன. அவரது கன்னங்கள் உள்வாங்கியிருந்தன அவரது முகத்தை துயரம் சூழ்ந்திருந்தது அவரது திறந்த வாயில் இரத்தக் கறைபடிந்த நாவு தொங்கிக்கொண்டிருந்தது. அவரது வயிறு உள்வாங்கி முதுகோடு ஒட்டிக்கொண்டது. அவரது உடல் இரத்தமில்லாமல் முற்றிலும் வறண்டுபோயிருந்தது அவரது உடல் எலும்பும் தோலுமாய்க் காட்சி அளித்தது. அவரது இரு கரங்களும் வலுவாக இழுக்கப்பட்டதால் அவரது உடலும் சிலுவையைப் போலவே காட்சி அளித்தது. அவரது தலை முடியும் தாடியும் இரத்தத்தால் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. அவரது இதயம் ஒன்று மட்டுமே புதிதாக இருந்தது. ஏனென்றால் அவரது திரு இருதயம் மிகவும் சிறந்தது வல்லமை வாய்ந்தது. அவரது தோல் எவ்வளவு மிருதுவானதென்றால் சிறியதொரு காயம் ஏற்பட்டாலும் அதிலிருந்து இரத்தம் வழிந்தோடும். அவரது இரத்தம் எவ்வளவு மென்மையாக இருந்ததென்றால் இரத்தத்தின் வழியாக அவரது சரீரத்தைக் காண முடிந்தது.

சில நேரங்களில் அவரது காயம்பட்ட உடல் பாகங்களில் வேதனையும் வலியும் அதிகமாகி அவரது உடல் மேலோங்கி எழுந்தது. அது அவரது இதயத்திற்கு பெரும் வேதனையைக் கொடுத்தது. அவரது இருதயத்திலிருந்து வலியும் வேதனையும் உடல் பாகங்கள் முழவதும் பரவி சாவின் கடைசி நிமிடத்திற்கு அவரை இட்டுச்சென்றது. அவரைச் சுற்றி அவரது நண்பர்கள் வேதனையுடன் அழுதுகொண்டிருந்தார்கள். இயேசுவின் உதவி அவர்களுக்கு இருந்திராவிடில் அந்த வேதனையையும் துக்கத்தையும் அவர்களால் தாங்கியிருக்க இயலாது. இயேசு இவ்வாறு வேதனைப்படுவதைப் பார்ப்பதைவிட முடிவில்லா காலத்திற்கும் நரகத்தில் தள்ளப்படுவது நலமே என்று நினைத்தார்கள். இப்படி அழுது புலம்பிக்கொண்டிருந்தவர்களை எனது மகன் மிகவும் கரிசனையாகக் கண்நோக்கினார்.

அவர் இவர்கள்மேல் வைத்திருந்த மென்மையான அன்பால் அவரது வேதனை இன்னும் அதிகமானது. எனவே சாதாரண மனிதன் வேதனை மிகுதியால் புலம்புவதைப்போலவே அவரும் தந்தையே எனது ஆவியை உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன் என்று கதறினார. இவர் இவ்வாறு கூறக்கேட்டதும் அவருடைய வியாகுலத் தாயான எனது உடல் முழுதும் அதிர்ந்தது துக்கம் எனது உள்ளத்தில் கசப்பாய் பாய்ந்தது. அவர் கதறியது இப்போது கதறுவதைப்போல என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவ்வாறு அவர சாகும் வேளையில் சொல்லெனாத் துயரமானது அவரது உடலெங்கும் பரவி தாங்கமுடியாத வேதனையால் அவரது உடல் மேலோங்கியது இதயம் வெடித்தது இறுதியாக அவரது தலை ஒரு முறை அன்னார்ந்து பார்த்தபின் கீழே விழுந்தது அவரது வாய் திறந்தது இரத்தம்படிந்த அவரது நாவு வெளியில் தொங்கியது. ஆணி அறையப்பட்டிருந்த இடத்திலிருந்து அவரது கைகள் இழுத்துக்கொண்டன எனவே அவரது பாதங்கள் உடலின் முழு பார்த்தையும் தாங்கியது. அவரது விரல்கள் விறைத்துப்போயின முதுகு சிலுவை பக்கமாக முட்டிக்கொண்டிருந்தது.

மரியா உன் மகன் இறந்துவிட்டார் என்றும் இறந்த இவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்றும் சிலர் என்னிடம் கூறினர். அங்கிருந்து அனைவரும் சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு மனிதன் அவரது விலாவை ஈட்டியால் குத்தினான். அவன் எவ்வளவு பலமாகக் குத்தினான் என்றால் அது ஒரு புறம் நுழைந்து மறுபுறம் வெளிவந்தது. அவன் அதை வெளியில் எடுத்தபோது அதில் இரத்தம் படிந்திருந்தது. இவ்வாறு எனது மகனின் விலாவைக் குத்தியதை எனது இருதயத்தைக் குத்தியதைப்போல் உணர்ந்தேன். பிறகு அவரை சிலுவையினின்று இறக்கி எனது மடியில் கிடத்தினார்கள்.

அவரது உடல் தொழுநோயாளியின் உடலைப்போல இருந்தது உடலெல்லாம் திறந்திருந்தது. அவரது கண்கள் உயிரற்று இரத்தத்தால் மூடப்பட்டிருந்தது. அவரது வாய் பனிக்கட்டியைப்போல குளிர்ந்திருந்தது. அவரது தாடி இரத்தம் படிந்த நூலைப்போல இருந்தது. அவரது முகம் விரைத்துப்போயிருந்தது. அவரது கைகளும் விறைத்துப்போயிருந்ததால் அவரது கைகளை மடக்க முடியவில்லை. எனவே விறைத்துப்போன அவரது உடல் சிலுவையில் தொங்கிய நிலையிலேயே எனது மடியில் வைக்கப்பட்டது.

அதன்பின் நான் வைத்திருந்த லினென் துணியால் அவரது உடலில் படிந்திருந்த இரத்தத்தைத் துடைத்தேன். அவர் இறந்தபோது திறந்துகொண்ட கண்களையும் வாயையும் மூடினேன். பிறகு அவரது உடலை சுத்தமான லினென் துணியில் வைத்துக் கட்டினார்கள். அதன்பிறகு அவரது உடலை ஒரு கல்லறையில் வைத்தனர். அவருக்குச் சித்தமானால் நானும் அவரோடு அந்தக் கல்லறையில் உயிரோடு அடக்கம் செய்யப்பட தயாராக இருந்தேன். இவை அனைத்தும் நடந்தேறிய பிறகு எனது அன்புக்குரிய அருளப்பன் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பார் மகளே உங்களுக்காக எனது மகன் பட்ட பாடுகளைப் பார்.

[1] புத்தகம் 7, அதிகாரம் 15ல் உள்ள விளக்கம்: "அவரை சிலுவையில் அறையுமுன்பு அவர் தலையிலிருந்த முள் முடியை எடுத்துவிட்டனர். அவரை சிலுவையில் அறைந்தபின் அவரது பரிசுத்த தலைமீது மீண்டும் வைத்து அழுத்தினர். எவ்வளவு வேகமாக அது அவரது தலையில் நுழைந்ததென்றால், இங்கும், அங்கும் பீறிட்டெழுந்த இரத்தமானது அவரது கண்களை மூடி மறைத்தது, அவரது கண்களிலும் காதுகளிலும் இரத்தம் வழிந்தோடியது.”