காவல் தூதர் ஒருவர் பிரிஜித்தாவிற்காக வேண்டுகிறார். இயேசு அந்த சம்மனசிடம் எதற்காக வேண்டுகிறாய் என்று கேட்கிறார். மேலும் தனது மணமகளுக்கு எது நல்லது என்பதையும் எடுத்துறைக்கின்றார்.
புத்தகம் 1 - அத்தியாயம் 12

இயேசுவின் மணமகளான பிரிஜித்தாவின் காவல் தூதர் இயேசுவிடம் வந்து அவளுக்காக மன்றாடினார். அதற்கு இயேசு "ஒரு மனிதன் அடுத்தவருக்காக மன்றாட விரும்பினால் அவரது மீட்புக்காக மன்றாட வேண்டும்.  நீ எனது வற்றாத அன்பினால் சுடர்விட்டெரியும் அணையாத நெருப்பு.  நீ என்னைப் பார்க்கும்போது அனைத்தையும் கண்டுகொள்கிறாய் அவற்றைப்பற்றி தெரிந்துகொள்கிறாய்.  நீ எனது விருப்பம் எதுவோ அதையே விரும்புகிறாய்.  எனவே எனது  மணமகளுக்கு எது நல்லதோ அதைச் சொல்" என்றார்.

அதற்கு அந்த தூதர், "ஆண்டவரே, நீர் அனைத்தையும் அறிந்தவர்" என்று கூற,  "அனைத்தும் என்றால், படைக்கப்பட்ட, இனி படைக்கப்படவிருக்கிற, எனது தெய்வீகத்தில் குடியுள்ள அனைத்தும் என்று பொருள்.  நான் மாறாதவர், விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தும் நான் அறிந்தவையே. ஆனால் நமது இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கும் எனது மணமகள் எனது திருவுளத்தை உணர்ந்துகொள்ளுமாறு அவளுக்கு எது நல்லதோ அவற்றை எனக்குக் கூறு" என்று இயேசு பதிலுரைத்தார்.  "ஆண்டவரே இவளுக்கு தற்பெருமையுள்ள பெரிய இதயம் இருக்கிறது. எனவே நீர் அதைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று அந்த தூதர் கூறினார்.  அதற்கு இயேசு "அப்படியென்றால் உனது வேண்டுகோள் என்ன?” என்று கேட்க, "ஆண்டவரே, அவள் இதயத்தைக் கட்டுப்படுத்த உமது இரக்கம் அவளுக்குத் தேவை" என்று கூற, "உனக்காக நான் இதைச் செய்வேன்.  நீதியற்ற இரக்கம் எப்போதும் என்னிடமில்லை. எனவே, அவள் என்னை முழுமையான இதயத்தோடு அன்பு செய்யவேண்டும்" என்று இயேசு பதிலுரைத்தார்.