வானதூதர்களின் அரசியான அன்னை மரியாள் தனது மகனை பிரிஜிட்டா எவ்வாறு அன்பு செய்ய வேண்டுமென்றும் தன்னோடு இணைந்து எப்படி அவருக்கு புகழ்பாட வேண்டுமென்றும் கற்றுத் தருகிறார்.
புத்தகம் 1 - அதிகாரம் 8

நானே விண்ணக அரசி. என்னை எப்படிப் புகழ்வது என்பதைப் பற்றி கவலைப் படுகின்றாய். எனது மகனுக்குச் செலுத்தும் புகழ்ச்சியாவும் எனக்குக் கொடுக்கும் புகழ்ச்சியே என்பதை திண்ணமாக அறிந்துகொள். அவரை அவமதிப்பவர்கள் என்னையும் அவமதிக்கின்றனர் ஏனென்றால் அவர் என்மீது கொண்டுள்ள அன்பும் நான் அவர்மீது கொண்டுள்ள அன்பும் மிகவும் ஆழமானது இருவரது இதயமும் ஒன்றுதான். மண்ணில் அவரது கருவியாக இருந்த என்னை வானதூதரகளுக்கும் மேலாக உயர்த்தி மேன்மைப்படுத்தினார்.

எனவே என்னை புகழும்போது கடவுளே அனைத்தையும் படைத்தவரே கன்னி மரியாளின் கருவறையில் தங்குவதற்காக வானின்று இறங்கி வந்தவரே நீர் அர்ச்சிக்கப்படுவதாக. கடவுளே கன்னி மரியாளுக்கு எந்தவித பாரமாகவும் இல்லாமல் பாவமின்றி மாசற்ற மனித உருவெடுக்க சித்தம் கொண்டவரே நீர் போற்றப்படுக. கடவுளே கன்னி மரியாளிடம் வந்து அவளது உள்ளத்திற்கும் உடலுக்கும் பேரானந்தத்தைக் கொடுத்து பாவமில்லாமல் அவளது உடலிலிருந்து வெளி வந்தவரே நீர் அர்ச்சிக்கப்படுவதாக.

கடவுளே நீர் விண்ணேற்றம் அடைந்தபிறகு உமது அன்னையாம் கன்னி மரியாளின் சந்தோஷத்திற்காக பலமுறை அவளைச் சந்தித்து ஆறுதல் அளித்தவரே நீர் அர்ச்சிக்கப்படுவதாக. கடவுளே உமது தாயாம் கன்னி மரியாளை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணிற்கு எடுத்துச் சென்று உமது தெய்வீகதிற்கு அடுத்ததாக அவளை அமர்த்தி வானதூதர்களுக்கும் மேலாக அவளை உயர்த்தியவரே நீர் அர்ச்சிக்கப்படுவதாக. கடவுளே! அன்னை மரியாளின் செபங்களின் பொருட்டு என்மீது இரக்கமாயிரும்! என்று கூறி புகழ்பாடு என்று கற்பித்தார்.