விண்ணகத்தின் அரசி தமது அன்புக்குரிய மகளிடம் தமது மகன் கன்னித் தாயான தம்மீது வைத்திருந்த அருமையான அன்பைப்பற்றியும் கிறிஸ்துவின் தாய் தனது தாயான அன்னம்மாளின் கற்புள்ள திருமணத்தால் கருவுற்றதையும் அக்கரு எவ்வாறு அர்ச்சிக்கப்பட்டது என்பதையும் எப்படி தமது ஆன்மாவோடும் உடலோடும் விண்ணிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பதையும் மரியாள் என்ற தமது பெயருக்குள்ள வல்லமையும் மற்றும் நன்மைக்கும் தீமைக்கும் கொடுக்கப்பட்டுள்ள வானதூதர்களைப் பற்றியும் கூறுகிறார்.
புத்தகம் 1 - அதிகாரம் 9

நானே விண்ணகத்தின் அரசி. எனது மகனை அன்பு செய் ஏனென்றால் அதற்கு அவர் மிகவும் தகுதியானவர். அவரை நீ பெற்றிருக்கும்போது தகுதியுள்ள அனைத்தையும் பெற்றுக் கொண்டதற்குச் சமமாகும். அவர் மிகவும் விரும்பத்தக்கவர் அவரை நீ விரும்பும்போது நீ விரும்புகின்ற அனைத்தையும் பெற்றிருக்கின்றாய். அவரை அன்பு செய் ஏனெனில் அவர் மிகுந்த நற்குணமுள்ளவர் அவரை நீ அன்பு செய்யும்போது அனைத்து நற்குணங்களும் உன்னை வந்தடைகின்றன்.

எனது ஆன்மாவின் மீதும் உடலின் மீதும் அவர கொண்டிருந்த அருமையான அன்பைப் பற்றியும் அவர் எனது பெயருக்குக் கொடுத்துள்ள வணக்கத்தைப் பற்றியும் கூறுகிறேன் கேள். எனது மகன் நான் அவரை அன்பு செய்வதற்கு முன்னரே என்னைப் படைத்ததன் மூலம் என்னை அன்பு செய்தார். அவரே எனது பெற்றோரின் திருமணத்தில் இணைந்து கொண்டார். எனது பெற்றோர்களைப்போல மிகவும் கற்புள்ள பெற்றோரை யாரும் காண முடியாது.

அவர்கள் விதிகளை மீறி இணைந்தது கிடையாது. மேலும் உருவாக்குவதற்கேயன்றி வேறு எந்த ஆசைக்காகவும் அவர்கள் இணைந்ததில்லை. வானதூதர் எனது பெற்றோருக்குத் தோன்றி தங்களிடமிருந்து பிறக்கவிருக்கும் கன்னியின் வழியாக உலக மீட்பு பிறக்கவிருக்கிறது என்று அறிவித்தது முதல் அவர்களிடமிருந்து இச்சை அழிந்துபோனது. இச்சைக்காக ஒன்று சேர்வதைவிட சாவதே மேலென்று விரும்பினாரகள். வானதூதர் அறிவித்ததன் பொருட்டு தெய்வீக சித்தத்திற்காகவும் கடவுள் மீது அவரகள் கொண்டிருந்த பேரன்பிற்காக மட்டுமே அவர்கள் உடலால் ஒன்று சேர்ந்தனர் வேறு எந்தவித இச்சைக்காகவும் அல்ல என்பது திண்ணம்.

இவ்வாறாக தெய்வீக அன்பினால் எனது கரு உருவாக்கப்பட்டது. எனது உடல் உருவானபோது கடவுள் தாம் படைத்த ஆன்மாவை அவரது தெய்வீகத்தினின்று எனக்குள் வைத்தார். அந்த ஆன்மா என் உடலுடன் இணைந்து பரிசுத்தப்படுத்தப்பட்டது. கருவிலிருந்த என்னை வானதூதர்கள் கண்காணித்தனர். இரவும் பகலும் என்னைப் பாதுகாத்தனர். எனது ஆன்மா எனது உடலோடு இணைந்து பரிசுத்தப்படுத்தப்பட்டபோது எனது தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தப் பேரானந்தத்தை வரணிக்க இயலாது. பிறகு எனது உயிர் முழுமை அடைந்தபோது கடவுள் என் உடலிலிருந்து எனது ஆன்மாவை எடுத்து தமது தெய்வீகத்திற்கு அடுத்தபடியாக வேறு எவருக்கும் கிடைக்காத மேலான இடத்தில் வைத்தார். எனவே எனது உடல் அவரால் படைக்கப்பட்ட வேறெந்த உடலையும் விட நெருக்கமாக அவரது பக்கத்தில் வைக்கப்பட்டது. என் மகன் எனது ஆன்மாவையும் உடலையும் எவ்வளவு அதிகமாக அன்பு செய்யதார் என்பதைப் பார்!

இவ்வாறாக என் ஆன்மாவையும் உடலையும் நான் பெற்றிருக்கும்போது சிலர் இதைக் கடுமையாக மறுக்கின்றனர் மேலும் சிலர் இதைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளவில்லை. ஆனால் எனது ஆன்மாவோடும் உடலோடும் கடவுளிடம் நான் எடுத்துக்கொள்ளப்பட்டது முற்றிலும் உண்மையானது. என் மகன் எனது பெயரை எவ்வளவு வணக்கத்துக்குரியதாகச் செய்தார் என்பதைப்பற்றி கூறுகிறேன் கேள்! பரிசுத்த வேதாகமம் சொல்வதைப்போல எனது பெயர் மரியாள். எனது பெயரைக் கேட்டவுடனே வானதூதர்கள் பேருவகை கொண்டு கடவுளுக்கு நன்றி கீதம் பாடுகின்றனர்.

ஏனென்றால் என் மீதும் எனது வழியாகவும் அவர் பேரிரக்கத்துடன் செயலாற்றினார். அதனால் மனித உருவெடுத்த எனது மகன் கடவுளது தெய்வீகத்தில் மேன்மைப்படுத்தப்படுவதை வானதூதர்கள் காண்கின்றனர். நோயுற்று படுத்தபடுக்கையாய் இருக்கும் ஒருவர் மற்றவர்கள் கூறும் ஆதரவான வார்த்தைகளைக் கேட்கும்போது எவ்வாறு உள்ளம் மகிழ்ந்து அமைதியடைகின்றதோ அதைப்போலவே உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களும் எனது பெயரைக் கேட்டவுடன் அளவுகடந்த பேருவகையால் அக்களிக்கின்றனர்.
எனது பெயர் உச்சரிக்கப்படும்போது நல்ல சம்மனசுக்கள் தாங்கள் காவல் தூதர்களாக வழிநடத்தும் நல்ல ஆன்மாக்களுக்கு நெருக்கமாகச் சென்று அந்த ஆன்மாக்களின் முன்னேற்றத்தின் பொருட்டு பேருவகை கொள்கின்றனர்.

நல்ல சம்மனசுக்கள் மனிதர்களைக் காவல் காப்பதற்கும் கெட்ட சம்மனசுக்கள் அவர்களைச் சோதிப்பதற்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் வானதூதர்கள் கடவுளிடமிருந்து பிரிக்கப்படுவதில்லை மாறாக கடவுளோடு அவரது பிரசன்னத்தில் எப்போதும் இருந்துகொண்டு ஆன்மாக்களின் நற்குணங்களை சுவாலைபோல பற்றி எரியச் செய்கின்றனர். நன்மை செய்வதற்கு அவர்களைத் தூண்டுகின்றனர். என் பெயரைக்கேட்டதும் சாத்தான் அடங்கி நடுநடுங்குவான். மரியாள் என்ற எனது பெயர் ஒலிக்கும்போதெல்லாம் தன் பிடியிலிருக்கும் ஆன்மாக்களை சாத்தான் விட்டுவிடுகிறான். எவ்வாறு பறவையானது சத்தத்தைக் கேட்டவுடன் தனது அலகையும் இறக்கைகளையும் உண்டுகொண்டிருந்த உணவை விட்டுவிட்டு பறந்து சென்றுவிட்டு மீண்டும் அதைத் தேடி வருவதைப்போல சாத்தானும் தான் விட்டுச்சென்ற ஆன்மாவை நோக்கி ஈட்டியைப்போல திரும்பி வருகிறான்.

அந்த ஆன்மா எந்தவித மன மாற்றமும் அடையாமல் இருந்தால் அதை ஆட்கொள்ளவே மீண்டும் வருகிறான். கடவுளுடைய அன்பில் எவரும் குறைந்தவரல்ல. மரியாள் என்ற எனது பெயரை உச்சரித்து இனி தீயனவற்றிற்கு மீண்டும் ஆளாகிவிடக் கூடாது என்று என்னும் ஆன்மாக்களை சாத்தான் எளிதாக விட்டுவிடுவதுமில்லை அதேபோல மீண்டும் பாவம் செய்யும் எண்ணம் வரும்வரை அந்த ஆன்மாவை நெருங்குவதும் இல்லை.

சில வேளைகளில் அந்த ஆன்மாவின் மேன்மைக்காகவே சாத்தானுக்கு சோதிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த ஆன்மாவை தன் வசம் ஈர்த்துக்கொள்வதற்கல்ல என்பதைத் தெரிந்துகொள்.